Sandhyavandanam - Full Overview
சந்தியாவந்தனம்:-
சந்தியா வந்தனம் என்றால் என்ன?
அதற்க்கு முன் சந்தி என்றால் என்ன? என பார்ப்போம்
சந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்
அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்திட்சமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும்.
அதாவது சந்தியாகலம் என்பது அதிகாலை, மத்யான்னம் சாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும்.
சந்தியாவந்தனத்தில் நமக்கு ஆசமனியம் பிராணாயாமம் சங்கல்பம் அர்க்யப்ரதானம், காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற ஆறு கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன.
ஆசமனியம் எனபது சுத்த தீரத்த்தை அச்சுதாய நம :
அனந்தாய நம :
கோவிந்தாய நம: என கூறியவாறே மூன்று முறை தீர்த்தத்தை ஸவீகரிப்பது
பிராணாயாமம் என்பது
பலர் இப்போது செய்வது போல மூக்கை அடைத்து கொண்டு பின்பு காது பக்கம் கையை கொண்டு போவதல்ல
அது
பிராணாயாமம் என்பது நம்முடலில் செல்லும் மூச்சுக் காற்றை முறைபடைத்தி வெளியே விடுதல் என்பதர்தம்
அதாவது முதலில் மூச்சை நன்கு வெளியில் விட்டு பின்பு வலது பக்க துவாரத்தை கட்டை விரலால் அழுத்தி மூடிக்கொண்டு இடது பக்க மூச்சு துவாரத்தினால் மூச்சை உள்ளிழுத்து இடது பக்க மூக்கை மோதிரவிரலாலும் சுண்டுவிரலாலும் அடைத்துக் கொண்டு ( இதனை பூரகம் என்பர்)
"ஓம் பூ: ஒம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் சத்யம்: ( அதாவது பூலோகம் ஸுவர்க்கலோகம் மஹரலோகம் சத்யலோஹம் என கூறப்படும் ஏழு லோஹங்களையும் நிணைத்து) ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந ப்ரசோதயாத் ஓமாப: ஜ்தோதிரஸ அம்ரதம் ப்ரம்ம பூர்புவஸ்ஸுரோம்"
{என கூறி முடிக்கும் போது வலது காதை தொடவேண்டும்( மூக்கை தொடுவதால் ஏற்படும் அசுத்தத்தை நீக்க)
(எந்த ஒரு அசுத்த செயலை செய்யும் போது நீர் கிட்டவிட்டால் வலது காதை தொட்டால் நாம் சுத்தமாவதாக சாஸ்திரம் கூறுகிறது)}
என்று நிதானமாக சொல்லி முடிக்கும் வரை மூச்சை மூக்குனுள் வைத்து ( இதை கும்பகம் என்பர்) பின் மெதுவாக கட்டைவிரலை நீக்கி வலது பக்க மூக்கால் வெளியிடுவது ( இதை ரேசகம் என்பர்)
சங்கல்பம் என்பது
சந்தியாவந்தனம் எந்த நேரத்திற்காக செய்கிறோமோ அந்த காலத்திற்கான பிராத்தனை
அர்க்ய ப்ரதானம் என்பது தீர்தம் மூலம் சூரியனுக்கும் கேசவாதிகளுக்கும் தகப்பானாரில்லாதவர்கள் பிதுர்களுக்கும் மந்திரமாக அந்த தீர்த்தத்தை அர்பணிப்பது இதை கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேராமல் இரண்டு கைகளாலும் சூர்யனை பார்த்து விட வேண்டும்
அர்கயம் ஏன் விட வேண்டும்?
மந்தேஹர் என்ற பெயருள்ள முப்பது கோடி கோர வீர குரூர ராக்ஷஸர்கள் இந்த ஸந்தியா காலங்களில் சூரியனை விழுங்க வருவார்கள் அவர்களிடமிருந்து சூரியனை காப்பாற்ற தேவர்களுக்கு ரிஷிகளும் தபஸிகளும் ஸந்தியாகாலத்தில் அர்க்யத்தை விடுவர் அது வஜ்ராயுதமாக மாறி சூரியனுக்கு உதவுமாம் எனவே தான் பூமியில் பிராமணர்களும் மற்றவர்களும் செய்கிறார்கள் என்பர்
சந்தியா வந்தனத்தை யாரெல்லாம் செய்யலாம்?
உபவீதம் செய்து கொண்டவர்கள் ( பிராமணர்கள் வாணியன் குயவன் சத்ரியன் என எல்லோருமே) எல்லோருமே செய்யலாம்
காலங்களின் மாற்றத்தால் நம்மில் பெரும்பாலனவர்கள் உட்பட யாரும் செய்வதில்லை
இதில் ஒரு முக்கிய காயத்திரி மந்திரத்தை பிராமணர்கள் மட்டுமே செய்யமுடியும் ஏனென்றால்
பிராமணர்களுக்கு மட்டுமே உபநயனம் முடித்தபின் தாயார் வாக்தேவியாகவும் தகப்பனார் பிரம்மாவாகவும் இருக்க உபநயனமான பிள்ளை அவரின் கால்களை நீரால் அலம்பி பிரம்மாவை தியானித்து வாக்தேவி முன்னிட்டு பிரம்மோபதேசம் ( காயத்ரி மந்திரத்தை மற்றவர்கள் காதில் விழாமல் உபதேசமாக பிரம்மாவாக இருந்து காதில் கூறுதல்-அதனால் தான் பட்டு வைத்து அவர்களை மூடிக்கொள்கிறார்கள்) பெற்றவர்களாய் மட்டுமே உச்சாடனம் செய்யவேணும் என பிரமானம்.
காயத்ரி ஜெபம்:- ஏன் மற்ற ஜபங்களை விட காயத்ரி ஜெபம் தான் செய்ய வேண்டுமா?
ஒருவனின் சந்தியாவந்தனத்தில் காயத்ரீ ஜபம் முறையாக செய்யும்போது அவனுக்கு நான்கு வேதங்களையே சொல்லிய பலன் கிடைப்பதால் காயத்ரீ ஜபத்தைத் தான் சந்தியாவந்தனத்தில் ஜபிக்க வேண்டும் என சாஸ்திர நியமமுண்டு.
இந்தக் காயத்ரீ மந்த்ரம் 24 அக்ஷரங்களைக் கொண்டு, 24 ரிஷிகளையும், அக்னி முதலிய 24 தேவதைகைகளையும், 24 சந்தஸ்களையும், 24 தத்துவங்களையும் மற்றும் 24 சக்திகளையும் கூறுகிறது.
காயத்ரி ஜெபத்தை 108, 54 அல்லது 27 முறை கால சௌகரியத்திற்கேற்ப்ப முறையாக ஜபிக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் வேக வேகமாக இடைவெளி இல்லாமல் ஜெபிக்கக் கூடாது. சத்தமாகவோ உதட்டில் முணுமுணுப்பாகவோ சொல்லக்கூடாது மனத்திற்க்குள் மட்டுமே சொல்லவேண்டும்.
பிரம்மசாரிகள் 5 பாகமாகவும் கிரஹஸ்தர்கள் 4 பாகமாகவும் நிறுத்தி இடைவெளி விட்டு ஜெபிக்க வேண்டும்
அதாவதுபிரம்மசாரிகள்
1 ஓம்பூர்புவஸ்ஸுவ
2 தத்ஸவிதுர்வரேண்யம்
3 பர்கோதேவஸ்யதீமஹி 4 தீயோயோந:பிரசோதயாத்
என நான்கு பாகமாகவும்
கிரஹஸ்தர்கள்
1ஓம்
2 பூர்புவஸ்ஸுவ என இரண்டாக பிரித்து ஐந்து பாகமாக சொல்லவேண்டும்
ஜபத்திற்குப் பிறகு உபஸ்தானம், திக்பந்தனம், அபிவாதனத்தைச் செய்ய வேண்டும்.
அதாவது நம்முடைய நித்ய கர்மாக்களில் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரீ ஜபங்களுக்கு முக்கியத்வம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
அஹரஹ: சந்த்யாம் உபாஸீத
என்று சந்தியாவந்தனத்தின் விதியில் கூறப்பட்டுள்ளது.
நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கர்மாக்களை 'நித்ய’, ‘நைமித்திக’, ‘காம்ய’ என்று மூன்றாக பிரத்துள்ளனர்
நாம் எந்த பிரதிபலனையும் விரும்பாமல் ஒரு கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய 'நித்ய'கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது.
ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் 'நைமித்யக' கர்மம் என்று கூறப்படுகிறது. இதில் தான் பித்ரு ஸ்ராத்தம் திருவாராதனம் ஆகியன அடங்கும்
'காம்ய' கர்மம் மூன்றாவதாகும்.
அதாவது. ஹோமங்கள் யக்ஞங்கள் பரிகார பூஜைகள் என்பன
இதைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும்.
காம்ய கர்மத்தைச் செய்யாமல் இருந்தாலும் தோஷம் கிடையாது.
தசரத சக்கரவர்த்தி புத்ர ப்ராப்திக்காக செய்த புத்ரேஷ்டி கூட காம்ய கர்மத்தில் அடங்கும்.
நித்ய கர்மாவில் அடங்கிய சந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் 'பாபபாக்' (பாபி) ஆகிவிடுவான் என தேவீபாகவதத்தில் கூறப்படுகிறது
"சந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ: சர்வகர்மஸு
யதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்"
சந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன்.
அவர்கள் ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை. அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான்.
பகவத் ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும்.
மனிதப் பிறப்புகளிலும் இந்த்ரிய சுகம் (போகம்) கிடைக்கிறது.
வேதாத்யயனம் மற்றும் சந்த்யா உபாசனைகளைச் செய்யாதவன் “த்விஜ” (இரண்டாவது முறை பிறந்தவன், முதலில் தாயின் வயிற்றிலிருந்து, இரண்டாவது முறையாக உபநயனம் செய்து கொண்டபொழுது) என்ற பெயருக்குத் தகுந்தவன் அல்லன்.
ஒரு வேளை கார்யங்களின் அழுத்தத்தினால் மத்யாஹ்ன சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் இருந்தாலும் ப்ராதசந்தியையும், சாயம் சந்திகளையும் கட்டாயமாகச் செய்யவேண்டும்.
மந்த்ரங்களை உச்சரிக்கும்பொழுது அதன் பொருளையும் கவனிக்க வேண்டும்.
சந்தியாவந்தனத்தில் தனக்கு சம்பவித்த வாசிக, மானஸிக, இராத்ரி சொப்பன இந்திரிய மூலமாக நித்தம் ஏற்படும் பாபங்கள் நாசமாகட்டும் என்ற ப்ரார்த்தனைகள் உள்ளது.
வைதிக தர்மத்தை அனுசரிப்பவர்களுக்கு வேதம் மிக முக்கியமானதாகும்.
கர்தவ்ய-அகர்தவ்ய (செய்ய வேண்டிய, செய்யக்கூடாத) கர்மாக்களின் விதி நிசேதங்களுக்கு வேதம் தான் மூலம் ஆகும்.
ப்ரம்ஹ கோளத்தில் வேதசக்தியின் ஊற்று அடங்கியுள்ளது. வசிஷ்ட, வாமதேவ, ஆகிய ரிஷிகளின் முக கமலங்களிலிருந்து வேத மந்திரங்கள் வெளியே வந்ததால் மந்த்ரங்கள் மேலும் வலிமை கொண்டுள்ளன.
புதியதாக உபநயனமான வடுவை முதலாக கொண்டு மற்ற எல்லா ஆசிரமத்தினர்களுக்கும் சந்தியாவந்தனம் கண்டிப்பாக செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
ஸ்வாத்யாயோத்யேதவ்ய: இது விதி வாக்யம் ஆகும்.
உத்யந்தமஸ்தம் யம்தமாதித்யம் அபித்யாயன் ப்ராம்ஹணோ வித்வான் ஸகலம் பத்ரமஸ்நுதே
உதித்து வரும், அஸ்தமனமாகிற சூர்யனை யார் தியானிக்கிறாரோ அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் மங்களம் தான் உண்டாகும்.
சந்த்யாலோபஸ்ய சா கர்தா ஸ்நானசீலஸ்ச ய:சதா
தம் தோஷா: நோபசர்பந்தே கருத்மந்தமிவோரகா:
காலத்தின் நடையானது சூர்யனைத்தான் நியமித்துள்ளது.
சூர்யோதய காலம் தான் ப்ராதசந்தி.
ஆகாயத்தில் நெற்றிக்கு மேல் வந்தபொழுது மத்யாஹன காலம் (அபிஜித்முஹூர்த்தம்)
அஸ்தமன நேரம் தான் ஸாயம்சந்தி காலம் ஆகும்.
நிரந்தரமாகச் செல்லும் காலப்பிரிவுகளில் இந்த மூன்று காலங்கள் மிகச் சிறந்த காலமாகும்.
பரமாத்மாவின் அனைத்து 'விபூதி'களில் (விபூதி என்றால் ஐஸ்வர்யம், பொருள், மகிமை என்று அர்த்தம்) சூர்யன் மிகச்சிறந்தவனும், ப்ரத்யக்ஷமாக தெரிகிறவனுமாவான்.
ஒருவனின் தேஜஸ், பலம், ஆயுள் ஆகியவற்றுக்கு சூர்யன் தான் காரணம். 'வர்த்மாபுனர்ஜன்மனாம்' என்ற வராஹமிஹிரரின் சொல்லின்படி பரந்தாமத்தை நோக்கி செல்பவர்களுக்கு சூர்ய மண்டலம் தான் மார்க்கம்.
சந்தியவந்தனத்திற்கான ப்ராதசந்தியின் காலம் எது?
உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா கநிஷ்டா ஸூர்ய சஹிதா ப்ராத: சந்த்யா த்ரிதாஸ்ம்ருதா
அதிகாலையில் இரவில் தோன்றிய நட்சத்திரங்கள் வானில் இருக்கும் பொழுதே சந்தியாவந்தனம் செய்வது உத்தமம் ஆகும்.
காலை மணி 5.00 முதல் 5.45 வரை
நட்சத்திரங்கள் மறைந்த பிறகு மத்யமம் ஆகும். காலை மணி 5.46 முதல் 6.30 மணிவரை
சூர்யன் இருக்கும்பொழுது செய்யக்கூடிய சந்தியாவந்தனம் கநிஷ்டம் ஆகும். காலை மணி 6.30க்கு பின் மதியம் 11.59 வரை
மேலும் இதற்கு விபரீதமாக சாயம்சந்தியின் காலம் என்பர்
மாத்யானிகம் செய்ய ஏற்ற காலம் எது?
மதியம் 12.00 முதல் 12.30 வரை
( அலுவலகம் செல்பவர்கள் ஆத்தில் திருவாராதனம் முடித்து ஆகாரம் ஸ்வீகரிக்கும் முன் பகல் 9.30க்கு பின் செய்வது உத்தமம் அதற்க்கு முன் செய்வது அவ்வளவு உச்சிதமல்ல)
ஸாயங்காலம் சந்தி செய்ய உகந்த நேரம் எது?
உத்தமா ஸூர்யசஹிதா மத்யமாலுப்ததாரகா
கநிஷ்டா தாரகோபேதா ஸாயம் சந்த்யா த்ரிதா ஸ்ம்ருதா
மாலையில் சூர்யன் இருக்கும் பொழுது செய்யக்கூடிய சந்தி உத்தமம் ஆகும். (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்)
நட்சத்திரங்கள் வருவதற்கு முன்பு செய்வது மத்யமம் ஆகும். மாலை 6.00 மணிமுதல் 6.30 மணிக்குள்
நட்சத்திரங்கள் வந்த பிறகு செய்வது கநிஷ்டம் ஆகும்.மாலை 6.30 மணிக்கு பின்
சந்தியாவந்தனத்தின் சக்தியைப் பற்றி மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் ஜரத்காரு ரிஷி வாசுகியின் சகோதரியைத் திருமணம் செய்த போது நிகழந்த ஒரு நிகழவு நமக்கு உணர்த்துகிறது.
அதாவது அந்த விவாஹ காலத்தில் அந்த ரிஷி ஓர் ஒப்பந்தத்தை முன்னிட்டு விவாஹத்திற்கு ஒப்புக்கொண்டார்.
வாசுகியின் சகோதரியுடன்
'எனக்குப் பிடிக்காத செயலை நீ எப்பொழுதாவது செய்தால் உடனே உன்னை விட்டுவிடுவேன்' என்பது ஒப்பந்தத்தின் நியமமாக இருந்தது.
ஒரு நாள் ரிஷி தன் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்
சூர்யாஸ்தமன காலம் வந்தது. ரிஷிக்கு விழிப்பு வரவில்லை.
அப்பொழுது அவனுடைய மனைவி அவரை (ஜரத்காரு) எழுப்பினால், 'அவர் கோபத்தில் என்னை விட்டுவிடுவானோ, எழுப்பாமல் விட்டால் சந்தியாலோபம் ஏற்படுமே' என்ற குழப்பத்தில், நான் என்ன செய்வேன் என்று சிந்தித்து,
'என்னைப் பரித்யாகம் செய்தாலும் பரவாயில்லை, சந்தியாலோபம் ஆகக்கூடாது' என்று நினைத்து தன் கணவனான ரிஷியை எழுப்பினாள்.
ரிஷியின் விருப்பத்திற்கு இந்த விழிப்பு விரோதமாக இருந்ததால் அவருக்குக் கோபம் வந்தது. அப்பொழுது அவர்
“ஏய்! பெண்ணே! (தன்னுடைய பூர்வ பிரதிக்ஞையை நினைத்து) இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்தாலும் எனது பிரபாவத்தை அறியாமல் இருக்கிறாயே! என்னுடைய அர்க்யத்தைப் பெறாமல் சூர்யன் மறையமாட்டான்”
சக்திரஸ்தி ந வாமோரு மயி ஸுப்தே விபாவஸோ: அஸ்தம் கந்தும் யதா காலம் இதி மே ஹ்ருதி வர்த்ததே)
என்று கூறினான்.
அதாவது உபாசனைகளில் நிஷ்டை வேண்டும். பக்தனின் நிஷ்டைகளுக்காகவே பகவான் அவனைப் பின் தொடருவான்.
சந்தியாவந்தனத்தில் காயத்ரீ மந்திரத்திற்கு மிகவும் மஹத்வம் உள்ளது.
வேதமாதா காயத்ரியின் மகிமையை அனைத்து வேதங்களிலும் கூறப்பட்டு உள்ளன.
ஏதத் அக்ஷரமேதாம் ச ஜபன் வ்யாஹ்ருதி பூர்விகாம்
சந்த்யயோர் வேதவித்விப்ரோ வேதபுண்யேன யுஜ்யதே
என்று கூறப்பட்டுள்ளது.
ஜபம் என்பது உபாம்சு, வாசிக, மானஸிக என்று மூன்று விதமாக இருக்கிறது.
அவற்றில் வாசிகத்தைவிட மானஸிக ஜபமும், மானஸிக ஜபத்தை விட, உபாம்சு ஜபமும் மிகச் சிறந்ததாகும்.
மஹாபாரதத்தின் சாந்தி பருவத்தில் காயத்ரியின் மஹிமை பற்றிக் கூறும் ஓர் அழகான கதை உள்ளது.
கௌசிக கோத்திரத்தில் பிப்பலாதன் என்ற தர்மிஷ்டனான ப்ராம்ஹணன் ஒருவன் இருந்தான்.
அவன் நிஷ்டையுடன் சந்தியாவந்தனம் கூடிய்காயத்ரியை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தான்.
ஆயிரம் வருடங்கள் இந்த நிஷ்டையில் கடந்தன.
ஒரு நாள் வேதமாதா காயத்ரீதேவி ப்ரத்யக்ஷமானாள். ஆனாலும் கூட அவன் அதை கவனத்தில் கொள்ளாமல் ஜபத்தில் மூழ்கியிருந்தான். ஜப எண்ணிக்கைகள் முழுமையாக முடிந்த பிறகு காயத்ரீதேவியை வணங்கி
ஏ தேவியே “காயத்திரி ஜபத்திலே எப்பொழுதும் என்னுடைய மனம் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள் செய்” என்று கேட்டுக் கொண்டான்.
'ததாஸ்து' என்று சொல்லி தேவி மறைந்தாள்.
பிப்பலாதன் முன்பு போல் ஜபத்தைத் தொடங்கினான். 100 திவ்ய வருடங்கள் கடந்தன.
ஒரு நாள் அவனது காயத்ரிதேவி புரச்சரணம் முடிந்த பிறகு தர்மமே மூர்த்தி ரூபத்தில் காட்சியளித்து வேண்டிய வரங்களைக் கொடுக்க தயாராயிற்று.
அந்த ப்ராம்ஹணன் முன்பு போல் கேட்க தர்மபுருஷனுக்கும் அவ்வாறே பதிலளித்தான்.
பிறகு காலன், யமன், தேவதைகளும் தவத்தின் பிரபாவத்திற்கு மகிழ்ந்து அங்கு வந்தார்கள்.
அரசனான இக்ஷ்வாகுவும் அங்கு வந்தடைந்தான்.
இராஜன் 'முனியாகிய உங்களுக்கு விரும்பிய அளவிற்கு செல்வங்களை அளிக்கிறேன். என்னிடமிருந்து பெற்றுக்கொள்வீராக' என்றான்.
அப்பொழுது பிப்பலாதன் 'எனக்கு செல்வங்கள் வேண்டாம். உனக்கு ஏதாவது ஆசையிருந்தால் என்னிடமிருந்து நீ பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறினான்.
இராஜன் பல திவ்ய வருடங்களாக சம்பாதித்த அந்த முனியின் தபோ பலத்தைக் கேட்டான்.
முனியோ கொடுக்கத் தயாரானார். இராஜன் க்ஷத்திரியனாக இருந்ததால், பிரதிக்ரஹ (வாங்குதல்) த்திற்குத் தயங்கினான்.
அப்பொழுது ப்ராம்ஹணன் “எம் சத்யத்தை (வாக்) நிறைவேற்ற நீ என் தவத்தின் பலனை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறினான்.
இவ்வாறு இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றபொழுது அங்கு தேவதைகள் ப்ரத்யக்ஷமானார்கள்.
"ப்ராம்ஹணன் காயத்ரி ஜபத்தின் பலனை இராஜாவிற்கு அளிக்கட்டும், அதனால் கிடைத்த புண்யத்தின் பலனை இராஜா ப்ராம்ஹணனுக்கு அளிக்கட்டும்” என்று தேவதைகள் சமாதானப்படுத்தினார்கள்.
உடனே ப்ராம்ஹணனின் ப்ரஹ்மரந்திரத்திலிருந்து திவ்யமான தேஜஸ் ஒன்று புறப்பட்டு ப்ரஹ்ம லோகத்தை நோக்கிச் சென்றது. மஹாயோகிகளுக்குக் கிடைக்கக்கூடிய ஸ்தானம் காயத்ரி மந்திரத்தை நிஷ்டையுடன் ஜபித்த ப்ராம்ஹணனுக்குக் கிடைத்தது.
இதுதான் ஸந்த்யாவந்தனம் மற்றும் காயத்ரி மந்திரங்களின் மஹிமையாகும்.
மஹாபாரதத்தில் மேலும் ஸந்த்யோபாஸனைக் குறிப்புகள் பல உள்ளன
அடியேனும் பலகாலம் செய்ய இயலாமல் தற்போதே செய்து வருகிறேன் நீங்களும் அதில் இணைய அடியேன் பிரார்த்திக்கிறேன்
முடிந்தவரை அணைவரும் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜெபத்தினை நிதமும் காலை மாலையில் மூன்று வேளைக்காகவும் செய்வோம் நிலையில்லா வாழ்வை விட்டு நிலையான மோட்சத்தை அடைவோம்.
Source: Whatsapp | Author: Unknown