Portaci Special (புரட்டாசி ஸ்பெஷல்!)

புரட்டாசி ஸ்பெஷல்!


பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா... அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார்.

கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார். 'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார்.

சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.

''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் 'நாராயணா' என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.

''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்

படுதுயர் ஆயின எல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்

அருளொடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற

தாயினும் ஆயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.''

'நாராயணா என்ற ஒரு சொல்லை கண்டு கொண்டால் போதும். அதன் மூலம் எல்லா நலன்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார். நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும். நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய். ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என்று கூறி ஆசியளித்தார்.

கோவிந்தா ஹரி கோவிந்தா !

Source: Whatsapp | Author: Unknown

0 Comments